vendredi 24 avril 2020

எங்கள் கதாநாயகனை நாம் இழந்தோம்.

வாழ்நாள் சாதனையாளர் அமரர் ஏ. ரகுநாதன் அவர்களது ஆத்ம சாந்தி வேண்டி கண்ணீர் அஞ்சலி.

இலங்கை, ஈழம், இந்தியா, புலம்பெயர் தேசங்களென உலகெங்கும் தன் கலைத்தாகத்தால் வியாபித்திருந்த மாபெரும் எம் வரலாறு ஒன்று ஓய்ந்து போனது.
வாழ்நாள் சாதனையாளர் ஏ.ரகுநாதன் ஐயா  ஈழத்து திரைப்படத்துறையில் பலருக்கு இன்ஸ்பிறேஷனாகவும், உந்துசக்தியாகவும், சக கலைஞனாகவும், முன்னோடியாகவும், விருப்பத்துக்கு உரியவராகவும், ஆலோசகராவும், ஆறுதலாகவும் இன்று வரை இருக்கும் ஒரு பெரும் ஆளுமை இவர். ரகுநாதன் ஜயா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட பயம் அறியாத இளம் கன்றாக எவ்வாறு தன் இளமைக்காலத்தில் இலங்கையின் நான்காவது தமிழ்த் திரைப்படமாகிய "நிர்மலா" என்னும் திரைப்படத்தைத் தயாரித்தாரோ அதே இளமை உணர்வோடும் கலைவெறியோடும் கடைசிவரை வாழ்ந்தவர்.
முதுபெரும் கலைஞர் ரகுநாதன் அவர்கள். எந்த விழாவில் கலந்து கொண்டாலும் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும் அதில் சிறுவர்கள் உட்பட முதியோர் வரை அவருடன் சேர்ந்து பழகுவதையும் அவரது அனுபவங்களை கேட்க ஆவலுடன் இருப்பதையும் அவரும் முகத்தில் புன்னகையுடன் அவர்களுக்கு அனுபவங்களையும் ஆலோசனைகளையும் முகம் சுளிக்காமல் சொல்வதையும் காணலாம்.                          
அவ்வாறு ஈழத்து திரைப்படத்துறையில் அதீத ஆர்வமும் ஈடுபாடும் உழைப்பும் கொண்ட ஒரு மாபெரும் கலைஞனை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் கலை உலகுக்கும் ஈழத்து திரைப்படத்துறையினருக்கும் நாவலர் குறும்பட விழா குழுவினர் சார்பிலும் பிரான்ஸ்-புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாகிகள் சார்பிலும் பாரதி விளையாட்டு கழகம் சார்பிலும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

samedi 11 avril 2020

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் விடுக்கும் அறிவித்தல்.

            பிரான்சில் கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் தனது நாளாந்த செயற்பாடுகளை தொடரமுடியாத நிலையை அடைந்துள்ளதை உறவுகள் அறிவீர்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரான்சில் எமது மக்களிடையே ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு கூட எம்மால் அஞ்சலி செலுத்தவோ மலர் தூவி மரியாதை செலுத்தவோ முடியாத நிலையை எண்ணி மிகவும் வருந்துகிறோம்.

அந்த வகையில் அண்மையில் பிரான்ஸில் காலமான அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை,  அமரர் கந்தப்பு சோமசுந்தரம்,  அமரர் நவசிவாயம் கனகம்மா,  அமரர் பாலச்சந்திரன் கமலாம்பிகை  ஆகியோருக்கும் மற்றும் இதில் யாரையாவது குறிப்பிட தவறி இருந்தால் அத்தனை அமரர்களுக்கும்  எமது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்தும் அதேநேரத்தில் அவர்களது ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்கின்றோம்.

 இது போன்ற தனிமைப்படுத்தப்பட்ட பயங்கர சூழ்நிலையில் அவர்களது குடும்ப உறுப்பினர்களது மனத்தைரியத்துக்கும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம். அவர்களது துயரத்தில் பங்கெடுக்க முடியாததையிட்டு எமது ஆழ்ந்த கவலையையும் மன்னிப்பையும் இத்தால் தெரியப்படுத்துகின்றோம்.       

நன்றி. 
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ். 10/04/2020

lundi 6 avril 2020

மனிதநேயப்பணியை வாழ்த்துகின்றோம்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள்ஒன்றிய மத்தியகுழு உறுப்பினர் திரு தர்மலிங்கம் பாஸ்கரன் அவர்களும், ஒன்றிய உறுப்பினர் திரு சதாசிவம் வைகுந்தராசன் அவர்களும் அவர்களின் அன்புக்குரியவர்களின் நினைவாக புங்குடுதீவில் தற்போதைய கொடிய கொரோனா நோய்ப்பரவல் காரணமாக வீடுகளில் வாரக்கணக்கில் தங்கியிருக்கும் மக்களுக்கு பாரிய நிதியுதவியுடன், உள்ளுார் அமைப்புக்களுடன் சேர்ந்து அம்மக்களுக்கு தேவையான உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றார்கள்

இவர்களின் இம்மனித நேயப்பணியானது சரியான நேரத்தில் அங்கு வாழ்வியல் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு கிடைக்கச் செய்ததனையிட்டு அவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களின் அன்புக்குரியவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

நன்றி
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்.